நவிமும்பையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை 4 பேர் கைது
நவிமும்பையில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட வாலிபரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
நவிமும்பை சாட்டே நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன், சுயநினைவின்றி கிடப்பதாக ராபலே எம்.ஐ.டி.சி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில், வாலிபர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மர்மநபர்கள அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலையுண்டவர் சச்சின் பாட்டீல் (வயது35) என்பது தெரியவந்தது.
மேலும் இந்த கொலை தொடர்பாக ஆகாஷ் கெய்க்வாட் (20) என்ற வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சச்சின் பாட்டீலை கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஆகாஷ் கெய்க்வாட் பொதுஇடத்தில் சிறுநீர் கழித்து உள்ளார். இதனை கண்ட சச்சின் பாட்டீல் அவரை கண்டித்து உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆகாஷ் கெய்க்வாட் தனது கூட்டாளிகள் 3 பேரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். பின்னர் 4 பேரும் சேர்ந்து சச்சின் பாட்டீலை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில், படுகாயமடைந்து அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆகாஷ் கெய்க்வாட் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story