‘ஊழலுக்காகவே ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டது தி.மு.க. அரசு’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு
ஊழலுக்காகவே ‘டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு தி.மு.க. அரசு தான் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் சாத்தங்குடி நாடார் உறவினர் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மேற்கு பகுதி கழக செயலாளர் சேசு தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான முகமது இஸ்மாயில் என்ற இக்பால், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல்ரகீம், அமைப்பு செயலாளர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணாவுக்கு பிறகு, கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடந்தது. அப்போது மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க.வினர் தங்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர் என்று உணர்ந்த மக்கள் எம்.ஜி.ஆருக்கு தங்களின் ஆதரவை அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்தனர். இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.
மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா?
சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்கு, ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று மீண்டும் மு.க.ஸ்டாலின் பொய் கூறுகிறார். ஏனெனில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த போது தான் ‘நீட்’ தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. அப்போது காங்கிரசில் அங்கம் வகித்தது தி.மு.க தான்.
அமைச்சர் வேலுமணி ஊழல் செய்கிறார் என்று மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்தார். அதற்கு பதிலளித்து பேசிய வேலுமணி என் மீதான புகாரை நிரூபித்தால் எனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன். புகாரில் உண்மை இல்லை என்றால் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்று சவால் விட்டார். ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலினிடம் எந்த பதிலும் இல்லை.
மேலும் அ.தி.மு.க.வினர் மீது அவர்கள் கூறும் புகார்களில் உண்மை இல்லை. ஆனால் ஊழல் செய்ததற்காகவே ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட அரசு தி.மு.க. தலைமையிலான அரசு தான் என்பது மக்களுக்கு தெரியும். நானும் மற்ற நிர்வாகிகளும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்கிறோம். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. அந்த அளவுக்கு திண்டுக்கல் மக்களின் நலனில் அக்கறை கொண்டவன் நான்.
திண்டுக்கல் மக்கள் சில கோரிக்கைகளை தற்போது தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் 2 மாதங்களில் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். நான் உங்களோடு பணி செய்வதை என்றைக்கும் யாராலும் தடுக்க முடியாது. அ.தி.மு.க. அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதிமுருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட துணை செயலாளர் பிரேம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.கே.டி.நடராஜன், தென்னம்பட்டி பழனிசாமி, பகுதி செயலாளர்கள் முரளிதரன், சுப்பிரமணி, மோகன், மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story