சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு தோல்வியை கொடுக்க தமிழக மக்கள், விவசாயிகள் தயாராக உள்ளனர் எல்.முருகன் பேச்சு


சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு தோல்வியை கொடுக்க தமிழக மக்கள், விவசாயிகள் தயாராக உள்ளனர் எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2021 10:08 AM IST (Updated: 4 Jan 2021 10:08 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களும், விவசாயிகளும் தி.மு.க.விற்கு தோல்வியை கொடுக்க தயாராக உள்ளனர் என்று வேலூரில் நடந்த அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட பா.ஜ.க. அணி மற்றும் பிரிவு பிரதிநிதிகள் மாநாடு வேலூர் மாங்காய் மண்டி அருகே நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் பா.ஜ.க. வளர்ந்து கொண்டிருக்கிறது. வருகிற 100 நாட்களில் 10 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க உள்ளோம்.

பிரதமர் மோடியின் சிறப்பான செயல்பாட்டால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அத்தனையும் பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளது. எதிர்கட்சிகள் தெரிவித்த விவசாயிகளின் கோரிக்கையும் நிறைவேற்றி உள்ளோம். அதனால் தான் எதிர்கட்சிகள் விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள். பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மத்தியில் பேராதரவு, அன்பு கிடைத்துள்ளது. இந்த ஆதரவை கெடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் விவசாய திருத்த சட்டங்களை மு.க.ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்.

தி.மு.க. தோல்வி அடையும்

சிறு, குறு விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடன் கடன் வாங்கும் நிலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை பொறுத்து கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் விவசாய திருத்த சட்டங்களை எதிர்க்கிறார். இந்த சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அவற்றுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. அதனால் வேலை நிறுத்த போராட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த தோல்வியை சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களும், விவசாயிகளும் தி.மு.க.விற்கு கொடுக்க தயாராக உள்ளனர்.

அரசியலில் மிகப்பெரிய மாற்றம்

மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் பயன் அடைந்து உள்ளனர். பா.ஜ.க.வின் அனைத்து நலத்திட்டங்களையும் ஏழை, எளிய மக்களிடம் பா.ஜ.க.வினர் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசியலில் பா.ஜ.க. மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணி உடைந்து போய்விட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வெள்ளி வாள் மற்றும் நினைவுப் பரிசுகளை கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.

மாநாட்டில் மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் பேசுகையில், இலங்கை போரில் படுகொலை செய்யப்பட்ட 1½ லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அறிவாலயத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது. அந்த ஆவி தி.மு.க.வை ஆட்சிக்கு வர விடாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டுமே. அவர்கள் தற்போது உத்தமர் போல பேசுகிறார்கள். 2 ஜி வழக்கு தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதற்கு பின்னர் எத்தனை எம்.பி. இடங்கள் காலியாக போகிறது என்பது தெரியவில்லை. வேலூர் மாவட்டத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

நிர்வாகிகள்

கூட்டத்தில், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், மாநில வணிகபிரிவு துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் கலைமகள் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story