மதுரை மாவட்டத்தில் 8¾ லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.222 கோடி பொங்கல் பரிசு அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்


மதுரை மாவட்டத்தில் 8¾ லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.222 கோடி பொங்கல் பரிசு அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Jan 2021 11:31 AM IST (Updated: 4 Jan 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் 8¾ லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் ரூ.222 கோடி பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மதுரை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.2,500 நிதி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த பொங்கல் நிதி மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்குவது இன்று(திங்கட்கிழமை) முதல் 12-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. அதில் விடுப்பட்டவர்களுக்கு 13-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொடு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது.

டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் பொதுமக்கள் சென்று தங்களது பொங்கல் பரிசினை பெற்று கொள்ளலாம். மதுரையில் இந்த திட்டத்தினை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இதற்கான விழா நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ பொங்கல் பரிசினை பொதுமக்களுக்கு வழங்கி பேசினார்.

பொங்கல் பரிசு

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் உள்ள 1,398 ரேஷன் கடைகளில் உள்ள 8 லட்சத்து 88 ஆயிரத்து 385 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 வீதம் ரூ.222 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், துணிப்பை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வளர்ச்சி பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் உலக தரத்தில் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும், மதுரை புது பொலிவு பெறும். 40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் முழுமையாக தேக்கப்பட்டு உள்ளது. கடந்த கால முறைப்படி, வைகை ஆற்றில் தண்ணீர் செல்லும்போது எல்லாம் பனையூர் கால்வாய் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் சென்று விடும். தெப்பக்குளம் மதுரை மக்களின் மெரீனாவாக உள்ளது.

குடிநீர் தேவை பூர்த்தியாகும்

மதுரை மக்களின் 50 ஆண்டு கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1,295 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது. இந்த திட்டம் நிறைவு பெற்றால் மதுரையில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story