கட்சி மாற சீனிவாஸ்கவுடா எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதாவினர் ரூ.5 கோடி கொடுத்த வழக்கு: மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் 12-ந்தேதி விசாரணை
ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வர எம்.எல்.ஏ. சீனிவாஸ்கவுடாவுக்கு பா.ஜனதாவினர் ரூ.5 கோடி கொடுத்த விவகாரம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு வருகிற 12-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.
பெங்களூரு,
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை பொதுத்தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது.. இந்த நிலையில் கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆபரேசன் தாமரை திட்டம் மூலம் பா.ஜனதாவுக்கு இழுத்ததாகவும், இதற்காக பல கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்ததாகவும் அக்கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டினர். அதுபோல் கோலார் தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ. சீனிவாஸ் கவுடா ஜனதா தளம்(எஸ்) கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாவில் சேர ரூ.5 கோடி பேரம் பேசி கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. சீனிவாஸ்கவுடாவுக்கு பா.ஜனதாவினர் ரூ.5 கோடி கொடுக்க முன்வந்தது தொடர்பாக வக்கீல் டி.ஜே.ஆப்ரகாம் என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு ேகார்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கட்சி மாறும் தடை சட்டத்தின் கீழ் இந்த மனு மீது விசாரணை நடத்தி, பணம் கொடுக்க முன்வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி அஸ்வத்நாராயண், எம்.எல்.ஏ. சீனிவாஸ்கவுடா, அப்போது முதல்-மந்திரியாக இருந்த எச்.டி.குமாரசாமி, எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத், எம்.எல்.சி., யோகேஷ்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சிறப்பு கோர்ட்டு, வருகிற 12-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story