கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தரை இறங்கிய மேக கூட்டத்தால் தள்ளாடிய வாகன ஓட்டிகள்


முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்; மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்
x
முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்; மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்
தினத்தந்தி 5 Jan 2021 9:50 AM IST (Updated: 5 Jan 2021 9:50 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருகிறது. தரை இறங்கிய மேக கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

குளிர் சீசன்
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில், தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பகல் நேரத்திலேயே கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் சாலைகளில் பொது மக்களின் நடமாட்டம் பெரிதும் குறைந்து காணப்பட்டது. அனைவரும் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியே நடமாடினர். மேலும் சிலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

தரை இறங்கிய மேக கூட்டம்
இதனிடையே கடந்த 3 நாட்களாக, வானத்தில் இருந்து மேக கூட்டங்கள் தரை இறங்கும் காட்சி அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் மலைப்பாதை தெரியாத அளவுக்கு மேக கூட்டங்கள் மூடி விடுகின்றன.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரத்திலேயே வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே இயக்கினர். தரை இறங்கும் மேக கூட்டம், தொடர்ந்து பெய்து வரும் சாரல்மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வேரோடு சாய்ந்த மரம்
இந்தநிலையில் நகரில் இருந்து பாம்பார்புரம் செல்லும் மலைப்பாதையில், சாலையோரத்தில் நின்ற மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலையினர் விரைந்து சென்று, அந்த மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து அடர்ந்த மேகமூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வருவதால் பல்வேறு துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

அணைகளின் நீர்மட்டம்
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அப்சர்வேட்டரியில் 19 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது. இதன் காரணமாக 21 அடி உயரம் உள்ள பழைய அணையின் நீர்மட்டம் 18.10 அடியாகவும், 36 அடி உயரம் கொண்ட புதிய மனோரஞ்சிதம் அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும் உள்ளது.

Next Story