சட்டசபை தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி ஜான்பாண்டியன் பேட்டி


சட்டசபை தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி ஜான்பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2021 8:27 AM IST (Updated: 6 Jan 2021 8:27 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன் கூறினார்.

நெல்லை,

எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது நாங்கள் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ளோம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பதை மாநில செயற்குழு மற்றும் பொதுக் குழுவில் முடிவு செய்வோம்.

எங்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் கூட்டணியில் இடம் பெறுவோம். சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து மாநில செயற்குழு தான் முடிவு செய்யும். தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். பொங்கலுக்கு பிறகு ஒவ்வொரு மாவட்டமாக நான் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளேன்.. தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி பற்றி அறிவிப்போம். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 441 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதற்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம். மேலும் 30 நாட்களில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில செயற்குழு கூட்டம்

முன்னதாக மாநில செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நெல்லையப்பன், இமான் சேகரன், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, செய்தி தொடர்பாளர் சண்முகம் சுதாகர், பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன், மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story