பாபநாசம் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு + "||" + 4 thousand cubic feet of water from Papanasam Dam opening: Nellai Thamiraparani river floods again
பாபநாசம் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு: நெல்லை தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
பாபநாசம் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
தென்காசி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் வெயில் அடித்ததால் வெள்ளப்பெருக்கு குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளுக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 142.55 அடியாக இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் 2 ஷட்டர்கள் வழியாக முதலில் 3,000 கனஅடி தண்ணீரும், பின்னர் 3,500 கனஅடியும் திறந்து விடப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 141.60 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 114.35 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவையாக உள்ளது. அணையில் இருந்து நேற்று 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவில்களை மூழ்கடித்தது
இதனால் நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணி ஆற்றில் உள்ள சுடலைமாடசாமி, கருப்பசாமி மற்றும் அம்மன் கோவில்களையும் வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் சென்றது. தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை தெரிவிக்கும் வகையில் விக்கிரமசிங்கபுரம் நகரசபையில் இருந்து ஒலிபெருக்கி மூலம் ஊழியர்கள் தெரிவித்தனர். கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதேபோல் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டதால், நேற்று காலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பாபநாசம் சோதனை சாவடியும் மூடப்பட்டது.
குற்றாலம் அருவி
குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மிதமான மழை காரணமாக அங்குள்ள அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. மெயின் அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு குறையாததால் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர். மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் உற்சாகத்துடன் வந்து குளித்து சென்றனர். மேலும் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அகஸ்தியர் அருவி அருகே கல்யாண தீர்த்தம் மலைப்பகுதியில் கொட்டுகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
நெல்லை தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சேதமடைந்த கோவிலை சீரமைக்கும் பணியில் பக்தர்கள் நேற்று ஈடுபட்டனர். வெள்ளத்தால் சாய்ந்த சாமி சிலைகள் கிரேன் உதவியுடன் மீண்டும் நிறுவப்பட்டன.