பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மஞ்சள் கொத்துகள் நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர்.
தஞ்சாவூர்,
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து ஆகும். பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபடுவார்கள். காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, நடுப்படுகை, படுகை, வளப்பக்குடி, நேமம், கண்டியூர், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அறுவடைக்கு தயார்
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படுகிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கொத்துகள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியிலும் மஞ்சள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் சீர் வரிசை கொடுப்பதற்காக இன்று(புதன்கிழமை) முதல் மஞ்சள் கொத்துகள் அறுவடை செய்யப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக அனைத்து மஞ்சள்களும் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
நல்ல விலை கிடைக்கும்
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. தஞ்சை, சூரக்கோட்டை, வரவுக்கோட்டை, திருவோணம், திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம்.
தற்போது மஞ்சள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சென்ற ஆண்டைப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.25 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.
மார்க்கெட்டுக்கு அனுப்பப்படும்
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெய்த மழையினால் மஞ்சள் பயிரில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இங்கு அறுவடையாகும் மஞ்சள் தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைவீதிகள், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story