திரும்ப திரும்ப கூறுவதால் பொய்கள் உண்மையாகி விடாது; மக்களின் விருப்பங்களை தடுத்தவர்களுக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்: புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
திரும்ப திரும்ப கூறுவதால் பொய்கள் உண்மையாகி விடாது. மக்களின் விருப்பங்களை தடுத்தவர்களுக்கு தேர்தலில் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று நாராயணசாமி கூறினார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தவறான தகவல்
புதுவை வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டி புதுவை காங்கிரஸ் அரசு ரேஷன் கடைகளை மூடிவிட்டதாக தவறான தகவலை பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார். குறுகிய அரசியல் நோக்கத்தோடு சிலர் தெரிவித்த தவறான தகவல்களை அப்படியே பேசியுள்ளார். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா 20 கிலோ இலவச அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டது. அந்த கோப்பு கவர்னருக்கு சென்றபோது மஞ்சள் கார்டுதாரர் களுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கவேண்டும் என்று தன்னிச்சையாக குறைத்து அதனை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அரிசிக்கு பதிலாக பணமாக வழங்கவேண்டும் என்று அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்தார். அரிசியை இந்திய உணவுக்கழகம் மூலம் கொள்முதல் செய்து வழங்கினால் தரமான அரிசி குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும். அதனால் அரசுக்கு செலவும் மிச்சமாகும் என்று கூறினோம். அதையும் கவர்னர் ஏற்றுக்கொள்ளவில்லை.
காலதாமதம்
2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இலவச அரிசிதான் வழங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கோப்பினை கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார்.
அதனை பரிசீலித்த உள்துறை அமைச்சகம் அரிசிக்கு பதிலாக பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு வழங்க உத்தரவிட்டது. அந்த அமைச்சத்தில்தான் கிஷன்ரெட்டி இணை மந்திரியாக உள்ளார். இது தவிர மஞ்சள் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வருமானவரி செலுத்துபவர்களின் பெயர்களை நீக்கியே வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்று புதுவை அரசிடம் இல்லாத ஒரு தரவினை கேட்டு கவர்னர் கிரண்பெடி கோப்பினை திருப்பி அனுப்பினார்.
கவர்னர் நினைத்திருந்தால் வருமான வரித்துறையிடம் ஒரேநாளில் வருமான வரி செலுத்துபவர்களின் விவரங்களை பெற்றிருக்க முடியும். ஆனால் மஞ்சள் கார்டு தாரர்களுக்கு பணம் செலுத்துவதில் காலதாமதம் செய்யவேண்டும் என்பதற்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்.
மக்களுக்கு துரோகம்
இலவச அரிசி வழங்கக்கோரி நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தபோது, உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் (பணமாகத்தான் கொடுக்க வேண்டும்) நடக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
அவ்வாறு வாதிட்டது கிஷன்ரெட்டி இணை மந்திரியாக உள்ள உள்துறை அமைச்சகமும், கவர்னர் கிரண்பெடியும்தான். எனவே இலவச அரிசி திட்டத்தினை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.
இந்த அரிசியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தரப்படும் தொகைதான் ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். இலவச அரிசி திட்டம் கவர்னரின் விருப்பத்திற்கிணங்க உள்துறை அமைச்சகத்தால் நிறுத்தப்பட்டதால் ரேஷன்கடை ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் போனது. ஒருபுறம் மத்திய அரசு அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் உணவு தானியங்களை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தையும் அமல்படுத்துகிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகமும், கிரண்பெடியும் புதுவை மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க உத்தரவிடுவது நம் மக்களுக்கு செய்யும் துரோகம். இதேபோல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்த இலவச வேட்டி, சேலை திட்டத்தையும் பயனாளி களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டதால் அதற்குரிய தொகையையும் ரேஷன்கடை ஊழியர்களுக்கு வழங்க முடியவில்லை.
அரசின் மானியக்கொடை மூலமாகவும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தன்னுடைய அதிகாரத்தின்கீழ் வரும் என்று அதிகாரிகளை மிரட்டி அந்த அதிகாரத்தினை தன் கையில் எடுத்துக்கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கோப்பையும் திருப்பி அனுப்பினார்.
ரேஷன் கடைகளை மூடியவர்கள்
கொரோனா ஊரடங்கின்போது அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் அரிசி வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அரிசிக்கு பதிலாக பணம்தான் வழங்கவேண்டும் என்று குடிமைப்பொருள் வழங்கல்துறை கோப்பு அனுப்பியது. இது யாருடைய தூண்டுதலின் பேரில் நடந்திருக்கும்? ஆனால் புதுவை அரசின் தொடர் முயற்சியால் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அரிசியையாவது ரேஷன் கடை மூலம் வினியோகம் செய்திருந்தால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாத பிறதுறை ஊழியர்களை வைத்து கவர்னர் வழங்க
வைத்தார். ரேஷன் கடைகளை திறக்காமல் பார்த்துக் கொண்டார். புதுவையில் ரேஷன் கடைகளை மூடவைத்தது கவர்னர் கிரண்பெடியும், மத்திய உள்துறை அமைச்சகமும்தான். இதுகுறித்த கோப்புகளையும் கடிதங்களையும் யார், எப்போது வேண்டுமானாலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று உண்மையை அறிந்துகொள்ளலாம்.
பொய்கள் உண்மையாகாது
திரும்ப திரும்ப கூறுவதால் பொய்கள் உண்மையாகி விடாது. காங்கிரஸ் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்து பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். இதற்கான விலையினை, தகுந்த பதிலடியை வரும் தேர்தலில் பொதுமக்கள் அவர்களுக்கு வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story