தஞ்சை, வல்லம் பகுதிகளில் 17 வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது


தஞ்சை, வல்லம் பகுதிகளில் 17 வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது
x
தினத்தந்தி 7 Jan 2021 9:18 AM IST (Updated: 7 Jan 2021 9:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, வல்லம் பகுதிகளில் 17 வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை மற்றும் வல்லம் போலீஸ் சரக பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளில் நகை, பொருட்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதே போல் வீட்டின் மேற்கூரையை பிரித்தும் நகை பொருட்கள் திருட்டு சம்பவங்கள் நடந்தன. தஞ்சை தாலுகா போலீஸ் நிலையம், வல்லம், தமிழ்ப்பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி, தஞ்சை மேற்கு, தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய பகுதிகளில் என மொத்தம் 17 வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.

இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர்சஞ்சய் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன் (வல்லம்), டேவிட் (தஞ்சை கிழக்கு), ரத்தினசாமி, சாமிநாதன், தனிப்படை போலீஸ்காரர்கள் இளவரசு, கருணாகரன், செந்தில் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த ரமே‌‌ஷ் (வயது29), தஞ்சை கொண்டிராஜபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (23) என்பது தெரிய வந்தது.

இவர்களுடன் தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த அஜீத் ஆகிய 3 பேரும் சேர்ந்து தஞ்சை பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை, பொருட்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களிடம் இருந்து 35 பவுன் நகை, 2 மோட்டார்சைக்கிள்கள், டி.வி, செல்போன், லேப்டாப் என ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் அடைப்பு

கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அஜீத்தை தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட கொட்டிவாக்கம் ரமே‌‌ஷ் மீது சென்னை, ஆந்திரா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரமே‌‌ஷ், அப்பீல் செய்து தற்போது வாரண்டும் உள்ளது. இந்த நிலையில் தஞ்சை வந்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கி இருந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

40 இருசக்கர வாகனங்கள்

மேலும் இவர்கள் தஞ்சை பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி உள்ளனர். அவற்றை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து தலைமறைவாக உள்ள அஜீத் கைது செய்யப்பட்ட பின்னர் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story