சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதியில் தொடர் மழை: 300 ஏக்கரில் நிலக்கடலை விதைகள் அழுகி நாசம்


சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதியில் தொடர் மழை: 300 ஏக்கரில் நிலக்கடலை விதைகள் அழுகி நாசம்
x
தினத்தந்தி 7 Jan 2021 9:22 AM IST (Updated: 7 Jan 2021 9:22 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 300 ஏக்கரில் நிலக்கடலை விதைகள் அழுகி நாசமாகி உள்ளன. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடைபகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான விவசாயிகள் போதுமான தண்ணீர் இன்றி நெல் சாகுபடியை கைவிட்டு பணப்பயிராகிய நிலக்கடலை சாகுபடியை விரும்பி செய்து வந்தனர்.

மேலும் மார்கழி பட்டம் நிலக்கடலை சாகுபடி பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக மகசூலை தரும். இதனால் அனைத்து விவசாயிகளும் மார்கழி பட்டத்தில் தான் நிலக்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.

முளைப்பதற்கு முன் பாதிப்பு

இந்த ஆண்டு நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடைமடை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மழை விட்டிருந்த நிலையில் விவசாயிகள் நிலக்கடலை விதையை விதைத்து சாகுபடியை தொடங்கினர்.

ஆனால் அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியதால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிலக்கடலை விதை முளைப்பதற்கு முன்பு பாதிப்பு ஏற்பட்டது.

நிலக்கடலை விதைகள் அழுகி நாசம்

மரக்காவலசை, கொடிவயல், ஊமத்தநாடு உள்ளிட்ட இடங்களில் 300 ஏக்கர் பரப்பளவில் விதைக்கப்பட்டிருந்த நிலக்கடலை விதை அழுகி நாசமாகி விட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.

நிலக்கடலை சாகுபடி பாதிப்புக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மதுக்கூர்

மதுக்கூர் மற்றும் பகுதியிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையை தொடர்ந்து தற்போது மீண்டும் பரவலாக மழை பெய்து வருவது, நெற்பயிர்களுக்கு கடுமையான பாதிப்பை தந்துள்ளது. பருவம் தவறி பெய்யும் மழையால் அறுவடை பணிகள் தடைபட்டுள்ளது. தற்போது பெய்யும் மழையால் பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் முளைக்க தொடங்கி உள்ளன. இதனால் விரக்தியில் உள்ளோம். கால்நடைகளுக்கு வைக்கோல் மிஞ்சுமா? என்பதே சந்தேகமாக உள்ளது’ என்றனர்.

Next Story