பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 7 Jan 2021 5:07 AM GMT (Updated: 7 Jan 2021 5:07 AM GMT)

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பேரூராட்சி சார்பில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களில் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆடுகளை விற்கவும், வாங்குவதற்கும் சென்னை, திருச்சி, கரூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், விவசாயிகளும் இங்கு கூடுவார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக உளுந்தூர்பேட்டையில் சந்தை நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்ததால் ஆட்டுசந்தை மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.

ரூ.5 கோடிக்கு விற்பனை

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகளை விற்க விவசாயிகளும், வாங்குவதற்கு வியாபாரிகளும் அதிக அளவில் திரண்டனர். விவசாயிகளிடம் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை விலைக்கு வாங்கி லாரி, மினி லாரிகளில் ஏற்றி தங்கள் ஊருக்கு கொண்டு சென்றதை காண முடிந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனதாகவும், குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.7 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் வரை விற்பனை ஆனது என்றும் அதன் மூலம் மொத்தம் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி இருக்கும் எனவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story