திண்டுக்கல் அருகே மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகன் மதுபாலன் (வயது 19). இவர் திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டியில் உள்ள தனது உறவினரான அஜீத்குமார் என்பவரது வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். மதுபாலனுக்கும், 10-ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுபாலன், அந்த மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றார்.
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே அந்த மாணவியும், மதுபாலனும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு விசாரித்தனர். இதில், மதுபாலன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக அவரது உறவினர் அஜீத்குமார் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மதுபாலன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவரஞ்சனியையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அஜீத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் அந்த மாணவி, அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story