மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மறியல்- 100 பேர் கைது
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் நலனுக்கு எதிராக திருத்தப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதயகுமார், மாநில துணைத்தலைவர் சிங்காரவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் செய்யக்கூடாது, கொரோனா காலத்தில் வேலை இழந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.7,500 மற்றும் மாதம் நபர் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி வழங்க வேண்டும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் மேட்டூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் இளங்கோ தலைமை தாங்கினார். இதில் கருப்பண்ணன், சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story