போலீஸ் விசாரணைக்கு பயந்து மின்சார ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலையா?; பழைய செல்போன் வாங்கியதால் வந்த வினை


போலீஸ் விசாரணைக்கு பயந்து மின்சார ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலையா?; பழைய செல்போன் வாங்கியதால் வந்த வினை
x
தினத்தந்தி 8 Jan 2021 4:18 AM IST (Updated: 8 Jan 2021 4:18 AM IST)
t-max-icont-min-icon

பழைய செல்போன் வாங்கியதால் வந்த போலீஸ் விசாரணைக்கு பயந்து நுங்கம்பாக்கம் அருகே மின்சார ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? என எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சுமணன்
சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 24) . இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். லட்சுமணன், சில நாட்களுக்கு முன்பு மூர்மார்க்கெட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் பழைய செல்போன் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார்.

இந்த செல்போனில், தனது ‘‘சிம் கார்டை’’ போட்டு உபயோகப்படுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி பேசின்பாலம் போலீஸ் நிலையத்தில் இருந்து லட்சுமணனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார், ‘‘இந்த செல்போன் வேறு ஒருவருடைய செல்போன். இந்த செல்போன் தொலைந்தது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணைக்காக நீங்கள் போலீஸ் நிலையம் வர வேண்டும்’’, என தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காட்ட வேண்டும்
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு செல்போன் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, லட்சுமணன், ‘‘இந்த செல்போன், மூர்மார்க்கெட்டில் கடை வைத்திருந்த பெரும்பாக்கத்தை சேர்ந்த யசோதா என்பவரிடம் வாங்கினேன்,’’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், ‘‘நாங்கள் அழைக்கும்போது, எங்களுடன் வந்து செல்போன் விற்ற நபரை அடையாளம் காட்ட வேண்டும்’’, என போலீசார் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்றார். மறுநாள், போலீசாரிடம் இருந்து லட்சுமணனுக்கு அழைப்பு வந்தது.

தற்கொலையா?
இதனால் லட்சுமணன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து நேற்று முன்தினம், தனது பெற்றோரிடம், பேசி, புலம்பிய அவர், தான், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் லட்சுமணனை சமாதானப்படுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே, தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரெயிலில் அடிபட்டு, உடல் சிதறி லட்சுமணன் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து எழும்பூர் ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லட்சுமணன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என்ற கோணங்களில் எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story