ராகுல் காந்தியை கண்டு பா.ஜனதா பயப்படுகிறது; சிவசேனா சொல்கிறது


ராகுல் காந்தியை கண்டு பா.ஜனதா பயப்படுகிறது; சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 8 Jan 2021 7:32 AM IST (Updated: 8 Jan 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியை கண்டு பயப்படுவதாலேயே அவரது குடும்பத்தை பற்றி இழிவுப்படுத்தும் பிரசாரங்களை மத்திய பா.ஜனதா ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

பாராட்டு
மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகித்து வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைமை பற்றி சிவசேனா விமர்சித்து இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் மராட்டிய கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சிவசேனாவின் கட்சி பத்திரிகையான "சாம்னா" வெகுவாக பாரட்டி உள்ளது.

இதுகுறித்து அதன் தலையங்கத்தில் கூறபட்டு இருப்பதாவது:-

பயப்படுகிறார்கள்
டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள் ராகுல் காந்திக்கு அஞ்சுகிறார்கள் என்பதே உண்மை. அதனால் தான், ராகுல் காந்தி குடும்பத்தை இழிவுபடுத்தும் பிரசாரங்களை பா.ஜனதாவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒருவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் தனக்கு எதிராக ஒரே ஒரு மனிதன் இருந்தாலும் அவனை கண்டு பயப்படுகிறார். அந்த தனி வீரன் நேர்மையானவனாக இருந்தால், அந்த பயம் மேலும் நூறு மடங்கு அதிகரிக்கிறது. மத்திய பா.ஜனதா ஆட்சியாளர்களின் ராகுல் காந்தி குறித்த பயம் இந்த வகையை சேர்ந்ததுதான்.

மாற்று இல்லை
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வருவது ஒரு நல்ல விஷயம். மோடியை தவிர பா.ஜனதாவுக்கு மாற்று இல்லை என்பதையும், ராகுல் காந்தியை தவிர காங்கிரசுக்கு வேறு மாற்று இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி ஒரு பலவீனமான தலைவர் என்று பிரசாரம் செய்த போதிலும், அவர் இன்னும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஒரு போர்வீரனைப்போல அஞ்சாமல் எதிர்த்து நின்று தாக்குகிறார். இந்த எதிர்க்கட்சி, ஒரு கட்டத்தில், பீனிக்ஸ் போன்ற சாம்பலிலிருந்து கிளம்பி வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story