வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு


வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவு - அமைச்சர் கே.சி. வீரமணி ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2021 1:17 PM GMT (Updated: 8 Jan 2021 1:17 PM GMT)

வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நிறைவடைந்த 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பஸ்நிலையத்தின் அருகே ரூ.11 கோடி மதிப்பில் 3 அடுக்கு நவீன வாகன நிறுத்துமிட கட்டுமான பணி கடந்தாண்டு தொடங்கியது. 6 ஆயிரத்து 662 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீத்தடுப்பு உபகரணங்கள், கழிப்பறை, ஓய்வறை, அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இங்கு 1,059 இருசக்கர வாகனங்கள், 42 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்க முடியும். இந்த வாகன நிறுத்துமிடம் கட்டிட பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

இந்த நவீன வாகன நிறுத்துமிடத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று ஆய்வு செய்தார். 3 அடுக்கு மாடிகளையும் பார்வையிட்ட அமைச்சர், மீதமுள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வாகன நிறுத்துமிடத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். மேலும் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை, சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது, கலெக்டர் சண்முகசுந்தரம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், என்ஜினீயர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா, காட்பாடி அரசுப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, அறங்காவல் குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், நிலவள வங்கி இயக்குனர் ஜனனி சதீஷ்குமார், தாசில்தார் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story