ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் உரிமம் தருவதாக வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி


ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் உரிமம் தருவதாக வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி
x

ராஜஸ்தான் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் தருவதாக கூறி ராமநாதபுரம் வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ரெயில்வேபீடர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீதாராம் மகன் சோகன்லால் (வயது52) . ராஜஸ்தானை சேர்ந்த இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னரே ராமநாதபுரம் வந்து ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் இவரின் செல்போன் எண்ணிற்கு வந்த ஆன்லைன் தகவலில் பிரபல பெட்ரோலிய நிறுவனத்தின் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் பகுதியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு தகுதியான நபர்கள் தேவை என்று கூறப்பட்டிருந்தது.

தான் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அங்கு பெட்ரோல் பங்க் அமைத்து செட்டில் ஆகிவிடலாம் என்று சோகன்லால் எண்ணினார். இதன்படி மேற்கண்ட தகவலின் அடிப்படையில் சோகன்லால் விண்ணப்பத்தை தரவிறக்கம்செய்து உடனடியாக அனுப்பி உள்ளார். அதனை தொடர்ந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் பெட்ரோல் பங்க் உரிமம் வழங்க விண்ணப்பத்தை பதிவு செய்வதற்காக ரூ.25 ஆயிரத்து 500 மற்றும் டெபாசிட் தொகையாக ரூ.8 லட்சத்து 40 ஆயிரமும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 500 தொகையை அவர்கள் தெரிவித்தபடி ஆன்லைன் மூலம் மும்பையில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டதும் மேற்கண்ட நபர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அதுகுறித்து சோகன்லால் விசாரித்துள்ளார். அப்போது அந்த இணையதள முகவரி போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சோகன்லால் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story