ராய்காட்டில் திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது - 2 பேர் பலி: 65 பேர் காயம்
ராய்காட்டில் திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.
மும்பை,
திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு நேற்று சத்தாராவில் உள்ள கோண்டுஷியில் இருந்து ராய்காட்டிற்கு மினி லாரி வந்து கொண்டு இருந்தது. லாரியில் மணமக்கள் உள்ளிட்ட சுமார் 70 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் லாரி மாலை வேளையில் ராய்காட் மாவட்டம் போலாட்பூர் அருகில் உள்ள குட்பான் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. 2 பேரை பிணமாக மீட்டுள்ளனர். 65 பேர் காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லாரியில் இருந்து பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டவர்களை தேடிவருகின்றனர். எனவே விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் மழை மற்றும் இரவு நேரமானதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல மினி லாரியில் இருந்த மணப்பெண், மணமகன் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி 250 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story