தா.பழூர் பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்தன - விவசாயிகள் வேதனை


தா.பழூர் பகுதியில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்தன - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 9 Jan 2021 4:56 PM IST (Updated: 9 Jan 2021 4:56 PM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் பகுதியில் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பாசன பகுதிகளான தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர், வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், அடிக்காமலை, மேலக்குடிகாடு, கீழகுடிகாடு, இடங்கண்ணி, அண்ணன்காரம்பேட்டை, சோழமாதேவி, கோடாலிகருப்பூர், உதயநத்தம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. அனைத்து ஊர்களிலும் சம்பா பருவத்தில் சரியான நேரத்தில் நடவு செய்த விவசாயிகள், பயிர் நன்கு விளைந்து வருவதை கண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆனால் கதிர்கள் விளைய தொடங்கும் நேரத்தில், மணிகள் பால் பிடிக்கும் பருவத்தில் பருவமழை பெய்ததால் நெல்மணிகளுக்குள் நீர் இறங்கி பதராக மாறியது. இதனால் வயல்களில் கதிர்கள் கருப்பு நிறமாக மாறுவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்தனர். இருப்பினும் அதில் தப்பிய நெற்பயிர்களை எண்ணி சற்று ஆறுதல் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 4, 5-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தன. ஏற்கனவே நெல்மணிகள் பதரான நிலையில், மிச்சம் மீதமிருந்த நெற்கதிர்களும் தற்போது தண்ணீரில் சாய்ந்து அழுகிக் கொண்டிருக்கின்றன. சம்பா பருவ விவசாயத்தில் மீண்டும், மீண்டும் ஏற்பட்ட இயற்கையின் தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்து, நிலைகுலைந்து உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். வேளாண்மைத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இதுவரை பயிர் சேதங்கள் குறித்து முற்றிலும் கணக்கு எடுக்கவே இல்லை, என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1 More update

Next Story