பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2021 8:50 PM IST (Updated: 9 Jan 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக அவ்வப்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 609 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 95.05 அடியாக இருந்தது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 488 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 95.30 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story