ஊழலில்தான் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது - விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஊழலில்தான் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் நேற்று பிரசாரம் செய்தார்.
இதையொட்டி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முதல் நிகழ்ச்சியாக அங்கு இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்திற்கு எதிரே போக்குவரத்து தொழிலாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு பொன்முடி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது முதன்முதலில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் பென்ஷன் நிலுவை கொடுக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. 13-வது ஊதிய கமிஷன் ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவுக்கு வந்தது. அக்டோபர் மாதம் முதல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை ஒப்பந்தம் போடப்படாமல் தொழிலாளர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது.
விடுமுறை எடுக்காமல் உழைத்த நாட்களுக்கான உரிய பணம் தரப்படாமல் வருகை பதிவேட்டில் குளறுபடி செய்யப்படும் ஒரு நிலைமை ஊரடங்கு காலத்தில் மோசமானதாக ஆக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், காமராஜர் வீதியில் உள்ள பெரியாரின் சிலைக்கும் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அங்கு திறந்தவேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்ட மக்களின் எழுச்சியை பார்க்கும்போது வருகிற சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் இந்தியாவிலேயே 3-வது பெரிய இயக்கம் தி.மு.க. என்று அங்கீகாரம் வழங்கியது தமிழக மக்கள். அந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டி அடித்தீர்கள். அதை நாம் மறந்தாலும் அவர்களால் மறக்க முடியாது. அதேபோல் இந்த தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவு தர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி யாருக்கு எடுபிடி என்று மக்களுக்கே தெரியும், அதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் படிப்படியாக முன்னேறி முதல்-அமைச்சராகியுள்ளதாக கூறுகிறார். அவர் எப்படி முதல்-அமைச்சரானார், யாருடைய காலை பிடித்து இந்த இடத்திற்கு வந்தார் என்று நான் சொல்ல மாட்டேன், அதுவும் உங்களுக்கு தெரியும்.
சசிகலா கோடி, கோடியாக ஊழல் செய்து 4 வருடம் சிறையில் இருந்து ரூ.100 கோடி அபராதம் கட்டியுள்ளார். அந்த அம்மாவை பற்றி நான் தவறாக பேசிவிட்டேன் என்று என் மீது வழக்கு போடுகிறார்கள். நானா அவரை பற்றி தவறாக பேசினேன்?
இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கி வருகிறோம் என்றும் கூறுகிறார்கள். ஊழலில்தான் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. சாலை பணிக்கு டெண்டர் விடுவதில்கூட ரூ.6,600 கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். அவர்கள் எங்களை பார்த்து தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போடுவதாக கூறுகிறார்கள்.
இந்த 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது நீங்கள். எங்கள் மீது ஊழல் வழக்கு இருந்தால் வழக்கு போடுங்கள், சந்திக்க தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா மீதான ஊழல் நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டு உலகத்திலேயே சிறைக்கு சென்ற முதலாவது முதல்-அமைச்சர் அவர்தான்.
அ.தி.மு.க.வினர் யாராவது வந்து உங்களிடம் வாக்கு கேட்டால் அவர்களிடம் ஒரே கேள்வியாக ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று கேளுங்கள், அடுத்த நிமிடமே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்.
ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம். விசாரணை கமிஷன் ஆரம்பித்து 3 ஆண்டுகளாகி விட்டது, 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாதது ஏன்? தமிழகத்திற்கு நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.10 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.1,500 கோடியை மட்டுமே வழங்கினர். ஆனால் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் கட்ட ரூ.10 ஆயிரம் கோடி, மோடி செல்ல புதியதாக 2 சொகுசு விமானங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி. இவையெல்லாம் யாருடைய பணம், மக்களின் வரிப்பணம். இதையெல்லாம் தட்டிக்கேட்காமல் மோடி அரசுக்கு அடிமையாக எடப்பாடி அரசு இருந்து வருகிறது. எடப்பாடிக்கு ஒரே ஒரு விருதுதான் கொடுக்க முடியும். அது மோடியின் சிறந்த அடிமைக்கான விருது.
நீட் தேர்வினால் தமிழகத்தில் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் இறந்துள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்பதுதான் தி.மு.க.வின் முதல் கொள்கை, அதை தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை எப்படி மாபெரும் வெற்றி பெற வைத்தீர்களோ அதுபோல் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்ட வேண்டும். எனவே நீங்கள் இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து காணை, முகையூர், வீரபாண்டி, திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய இடங்களிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி, டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் இரா.லட்சுமணன், மாநில தீர்மானக்குழு செயலாளர் ஏ.ஜி.சம்பத், மாநில இளைஞரணி துணை செயலாளர் சேகர், மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், மைதிலிராஜேந்திரன், முருகன், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, இணை செயலாளர் செந்தமிழ்செல்வன், காணை ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, முருகன், ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் அசோக்குமார், விழுப்புரம் வக்கீல்கள் சங்க செயலாளர் சிவக்குமார் மற்றும் கோபிசிகாமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், விழுப்புரம் நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story