புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை; தீ விபத்து நடந்த ஆஸ்பத்திரி வார்டில் மின் சப்ளை ஏற்ற இறக்கத்துடன் இருந்துள்ளது; மராட்டிய முன்னாள் மந்திரி குற்றச்சாட்டு
10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய ஆஸ்பத்திரி வார்டில் மின் சப்ளை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாகவும், இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர் என முன்னாள் மந்திரி சந்திரசேகர் பவன்குலே உருக்கமாக கூறியுள்ளார்.
முன்னாள் மந்திரி உருக்கம்
பண்டாரா அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் சிறப்பு வார்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தநிலையில் விபத்து நடந்த ஆஸ்பத்திரிக்குள் பத்திரிகையாளர்கள் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
எனினும் விபத்து குறித்து தெரிந்தவுடன் ஆஸ்பத்திரிக்கு வெளியில் அதிகளவில் மக்கள் திரண்டனர். மந்திரிகள், முன்னாள் மந்திரிகள் உள்ளிட்டவர்கள் மட்டுமே ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கரும்புகை படிந்த சுவர்கள், எரிந்து நாசமான நாற்காலி, பொருட்கள் தீ விபத்தின் கோரத்தை தெரிவிக்கும் வகையில் இருப்பதாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மாநில மின்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே உருக்கமாக கூறியுள்ளார்.
பெற்றோர் புகார்
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-
உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசினேன். அப்போது அவர்கள் கடந்த 7 நாட்களாக ஆஸ்பத்திரி குழந்தைகள் சிறப்பு வார்டில் மின் வினியோகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக கூறினர்.
மேலும் அவர் சுவிட்ஜ் போர்ட்டு உள்ளிட்டவற்றை சோதனை செய்யுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆஸ்பத்திரிக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், மின்சாதன பொருட்கள் வழங்கப்படவில்லை. வார்டின் புகைப்படங்கள், அறைகளை சூழ்ந்து இருந்த கரியும், புகையும் தீயின் கோரத்தை நமக்கு காட்டுகிறது. சுவர்கள் கருப்பாகி இருந்தன. தரை சாம்பலாலும், தூசியாலும் நிறைந்து காணப்பட்டது. பெரும்பாலான நாற்காலிகள் எரிந்து நாசமாகிவிட்டன. இரும்பு ஸ்டெச்சர் உள்ளிட்ட சில பொருட்கள் மட்டுமே தப்பித்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story