கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா


கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா
x
தினத்தந்தி 10 Jan 2021 7:36 AM IST (Updated: 10 Jan 2021 7:36 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் தமிழரசி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த தர்ணா போராட்டத்தில் சகிலா, சின்னுசாமி, ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்.

பதவி உயர்வு ஆணைகள்

2019-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பை 40-ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

2021-ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Next Story