கர்நாடக அரசு சொகுசு பஸ்களில் வார இறுதி நாட்களுக்கான 10 சதவீத கூடுதல் கட்டணம் ரத்து; கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவிப்பு
அரசு சொகுசு பஸ்களில் வார இறுதி நாட்களுக்கான 10 சதவீத கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்து உள்ளது.
சொகுசு பஸ்கள்
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகத்திற்குள்ளும், கர்நாடகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், அம்பாரி கனவு வகுப்பு, குளிர்சாதன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் சாதாரண நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சொகுசு பஸ்களில் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு பயணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் சாதாரண நாட்களை போல வார இறுதி நாட்களிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வந்தனர்.
கூடுதல் கட்டணம் ரத்து
இந்த நிலையில் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் இயக்கப்படும் சொகுசு பஸ்களில் வார இறுதி நாட்களில், சாதாரண நாட்களை காட்டிலும் கூடுதலாக 10 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கூடுதல் கட்டண வசூலிப்பை திரும்ப பெற வேண்டும் என்று பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனால் வருகிற 15-ந் தேதி முதல் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை வார இறுதி நாட்களில் வசூலிக்கப்படும் 10 சதவீத கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வார இறுதி நாட்களிலும் சாதாரண நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணம் தான் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி.யின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story