திருச்சி மாநகரில் காணாமல்போன ரூ.22¾ லட்சம் செல்போன்கள் மீட்பு


திருச்சி மாநகரில் காணாமல்போன ரூ.22¾ லட்சம் செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 2:18 AM GMT (Updated: 10 Jan 2021 2:18 AM GMT)

திருச்சி மாநகரில் மாயமான ரூ.22¾ லட்சம் மதிப்பிலான 165 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி மாநகரம், மாவட்டம் மற்றும் பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் பயணம் செய்த போதும், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதும், ஷாப்பிங் செய்த போதும் மற்றும் பிற நிகழ்வுகளில் அவர்களின் செல்போன்கள் காணாமல் போனதாக 165 புகார்கள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் பிரிவு, கோட்டை மற்றும் கண்டோன்மெண்ட் போலீஸ் சரக குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் காணாமல் போன 165 செல்போன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.

போலீஸ் கமிஷனர் லோகநாதன் கலந்து கொண்டு ரூ.22 லட்சத்து 85 ஆயிரத்து 140 மதிப்புள்ள முன்னணி நிறுவனங்களின் 165 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். இவற்றில் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 செல்போன்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாராட்டு

நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் பவன்குமார் ரெட்டி, வேதரத்தினம், கூடுதல் துணை கமிஷனர் ரமேஷ்பாபு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் சின்னச்சாமி மற்றும் தனிப்படையில் இடம் பெற்ற போலீசார் கலந்து கொண்டனர்.

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் தனிப்படை போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

Next Story