பா.ஜனதா மேலிடம் திடீர் அழைப்பு; முதல்-மந்திரி எடியூரப்பா இன்று டெல்லி பயணம்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தலைவர்களுடன் ஆலோசனை


கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
x
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
தினத்தந்தி 10 Jan 2021 8:07 AM IST (Updated: 10 Jan 2021 8:07 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா மேலிடத்தின் திடீர் அழைப்பை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அவர், தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மந்திரி பதவி வழங்க...
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அமைந்திருந்தது. அந்த கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள், தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருந்து வருகிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு(2020) சிரா, ஆர்.ஆர்.நகர் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்ததாலும், கடந்த மாதம் (டிசம்பர்) கிராம பஞ்சாயத்து தேர்தல் நடந்ததாலும் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போனதாக கூறப்பட்டது. மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து 2 முறை முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தி இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, அவரால் சந்திக்க முடியாமல் போனது.

எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி
இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அமித்ஷா அனுமதி அளிக்கவில்லை என்று தகவல் வெளியானது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அவருடன் நடந்த ஆலோசனைக்கு பின்பு பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி அளித்ததும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறி வந்தார்.

மேலும் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகம் வருகை தர உள்ளார். அவருடன் ஆலோசனை நடத்திவிட்டு சங்கராந்திக்கு பின்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மந்திசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போனதால், எடியூரப்பாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

எடியூரப்பாவுக்கு அழைப்பு
இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை டெல்லிக்கு வரும்படி பா.ஜனதா மேலிடம் நேற்று திடீரென அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எடியூரப்பாவை டெல்லிக்கு வரும்படி அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

ஆனால் அவர் பெங்களூருவுக்கு எப்போது திரும்புகிறார் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவதற்காக எடியூரப்பா டெல்லி செல்வதாக முதல்-மந்திரி அலுவலக வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி செல்லும் முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மந்திரிசபை விரிவாக்கம்
அதாவது மந்திரிசபையில் யாரை சேர்ப்பது, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார். மேலும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? அல்லது மந்திரிசபை மாற்றி அமைக்கப்படுமா? என்பது குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று நடத்தும் ஆலோசனைக்கு பின்பு தெரியவர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்கள் குறித்தும் பா.ஜனதா தலைவர்களுடன், எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. கர்நாடகத்தில் காலியாக உள்ள மஸ்கி, பசவ கல்யாண் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும், பெலகாவி நாடாளுமன்ற தொகுதிக்கும் எந்த நேரமும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இதனால் அந்த தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும், மேலிட தலைவர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா இன்று டெல்லி பயணம் மேற்கொள்வதால் விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று, பதவியை எதிர்பார்த்து காத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story