புதுவை மின்துறை ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தம்
தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குகிறார்கள்.
தனியார் மயம்
மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்துறையை கார்ப்பரேசனாகவோ, தனியார் மயமாகவோ மாற்றக்கூடாது என கடந்த ஆண்டு மே மாதம் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தொழிற்சங்கங்கள் கருத்தினை கேட்டறிந்து சட்டசபை கூட்டத்தில மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
அதிகாரபூர்வ தகவல்
ஆனால் கவர்னர் கிரண்பெடி எடுத்த முடிவின் அடிப்படையில் மத்திய அரசானது கடந்த நவம்பர் மாதம் அனுப்பிய கடிதத்தில் புதுவை மின்துறையை கார்ப்பரேசன் அல்லது தனியார்மயமாக்க தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இதை கண்டித்து மின்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் வேலைநிறுத்தத்திற்கான கடிதத்தினை கடந்த 24-ந்தேதி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அதன்படி மின்துறை தலைமை அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளோம். இதற்காக பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த போராட்டத்தை ஒட்டுமொத்த புதுவை மக்களின் போராட்டமாக கருத்தில்கொள்ள வேண்டும். மின்துறை என்பது நுகர்வோரின் பொது சொத்து. அதனை தனியாருக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story