கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் தொழிற்பயிற்சி மையங்களின் கூட்டமைப்பினர் திடீர் தர்ணா


கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் தொழிற்பயிற்சி மையங்களின் கூட்டமைப்பினர் திடீர் தர்ணா
x
தினத்தந்தி 10 Jan 2021 5:33 AM GMT (Updated: 10 Jan 2021 5:33 AM GMT)

தனியார் தொழிற்பயிற்சி மையங்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியை கண்டித்து அக்கல்லூரி மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதாவது கல்லூரி நிர்வாகி ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மாணவிகளின் கல்வி சான்றிதழ்களை தராமல் மிரட்டுவதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதற்கிடையே மாணவிகளின் போராட்டத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரியை ஒரு கும்பல் மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு தனியார் தொழிற்பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு ஸ்கில் இந்தியன் அமைப்பு நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் எச்சரிக்கை

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும் என்றும், அதுவரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறினர்.

ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

மனு

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஒரு சிலர் மட்டும் சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “தமிழ்நாடு தனியார் திறன்பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு ஸ்கில் இந்தியன் உறுப்பு கல்லூரிகள் தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பிரிவுகளில் தொழில் பயிற்சிகளை முறையான அங்கீகாரத்துடன் நடத்தி வருகிறது. ஆனால் ஒரு அமைப்பினர் இதுபோன்ற சிறு கல்லூரிகளை நோட்டமிட்டு இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி பணம் பறிப்பதற்காக கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story