பொங்கல் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பொங்கல் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 10 Jan 2021 11:21 AM IST (Updated: 10 Jan 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதையடுத்து உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி லாரி, மினி லாரிகளில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். இதனால் தியாகதுருகம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ரூ.1 கோடிக்கு விற்பனை

இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம் என்று கருதி விவசாயிகள் பலர் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தனர். வியாபாரிகளும் ஆடுகளை போட்டிபோட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் குறைந்த பட்சமாக ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்துக்கும் விலைபோனது. ஆட்டுக்குட்டி ஒன்று ரூ.2,500 முதல் ரூ.6,000 வரை விலைபோனது. வழக்கமாக சந்தைக்கு வரும் ஆடுகளை விட நேற்று கூடுதலாக ஆடுகள் வந்தன. இதனால் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம். கடந்த 4 வாரங்களாக தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக இந்த சந்தையில் ஆடுகளை வாங்கியதால் ஆடுகள் கூடுதலாக விற்பனையானது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.

Next Story