மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு


மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Jan 2021 4:59 PM GMT (Updated: 10 Jan 2021 4:59 PM GMT)

திருப்பூரில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக வைரலாகும் வாட்ஸ்-அப் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திண்டுக்கல் நாட்டாமைக்காரர் வீதியை அடுத்த சொசைட்டி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகன் பாண்டியராஜ் (வயது 27) . இவருக்கும் அவருடைய அத்தை மகளான சித்ரா (21) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு திருப்பூர் வந்த பாண்டியராஜ் மனைவி மற்றும் குழந்தையுடன் சாமுண்டிபுரத்தை அடுத்த பாலதண்டாயுதபானி வீதியில் வசித்து வந்தார். மேலும் அவர் புஷ்பா சந்திப்பில் உள்ள பார்சல் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சித்ரா கணவரிடம் கோபித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். இதையடுத்து பாண்டியராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரையும் அழைத்து ஒன்றாக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி உள்ளனர். ஆனால் சித்ரா கணவருடன் செல்வதற்கு மறுத்து விட்டார்.

பின்னர் அவர் குழந்தையுடன் மீண்டும் தாய் வீட்டிற்கே சென்றுள்ளார். இதனால் பாண்டியராஜ் மனவேதனை அடைந்துள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அவர் தினமும் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தை பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டியராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதன்படி நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்த அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் போர்வையால் தூக்கு மாட்டிக் கொள்வதையும், அதற்கு முன்பதாக 12 மணியளவில் புலி மரணம். பாய் என்று கூறும் அவர் பறக்கும் முத்தம் கொடுத்தவாறே இந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை என்று பாண்டியராஜ் கூறுவது அந்த வீடியோவில் உள்ளது.

இதை பார்த்த அவருடைய நண்பர்கள் பதறியடித்தபடி அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பாண்டியராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story