மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்


மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Jan 2021 10:55 PM GMT (Updated: 10 Jan 2021 10:55 PM GMT)

மீன்சுருட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வீரசோழபுரத்தை அடுத்துள்ள வாணவநல்லூர் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலை குலத்தொழிலாக கருதி பல்வேறு சிரமங்களுக்கு இடையே செய்து வருகின்றனர்.

ஆனால் மண்பாண்டங்கள் செய்வதற்கு மூலப்பொருளான களிமண் எடுத்து வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மண்பாண்டங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. மேலும் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாகவும் தொழிலை மேம்படுத்த முடியவில்லை. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாத காலமாக மண்பாண்ட தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல்வேறு இடர்பாடுகள் உள்ளபோதும், தொழிலாளர்கள் மண்பாண்ட தொழிலை விட்டுவிடவில்லை.

தயாராகும் பானைகள்

இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பானைகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கலன்று பாரம்பரிய வழக்கப்படி பலர் மண்பானைகளிலேயே பொங்கலிடுவார்கள். இதனால் பானைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் சட்டிகள், அதற்கான மூடிகள் போன்றவையும் செய்யப்படுகின்றன.

மண்பாண்டங்கள் செய்வதற்கு முக்கிய மூலப்பொருளான களிமண்ணை காய வைத்து, பின்னர் களிமண்ணில் தண்ணீர் விட்டு பிசைந்து சுழற்றப்படும் சக்கரத்தில் வைத்தும், நவீன எந்திரம் மூலமும் பானை உருவாக்கப்படுகிறது. அந்த பானைகள் காயவைத்த பின்னர், சூளையில் வைத்து சுடப்படுகின்றன. இதையடுத்து பானைகள் விற்பனைக்கு தயாராகின்றன.

கோரிக்கை

இதேபோல் அடுப்பு, மண் பொம்மைகள், பூந்தொட்டி, அகல்விளக்கு, கலச பானை, தண்ணீர் பானை, தண்ணீர் தொட்டி, மண் குதிரை உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். அவை மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளில் மொத்த விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் உள்ளூர் வியாபாரிகளும் மண்பாண்டங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பானை அளவினை பொறுத்து ரூ.50 முதல் ரூ.100 விற்கப்படுகிறது.

மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளபோதிலும், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மண்பாண்டங்கள் உற்பத்தி செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் பானை செய்வதற்கு தேவையான மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story