பாலியல் புகாரில் போலீஸ் விசாரணை முடியும் வரை மந்திரி தனஞ்செய் முண்டே பதவி நீக்கம் இல்லை; சரத்பவார் அறிவிப்பு


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
x
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்
தினத்தந்தி 15 Jan 2021 8:13 PM GMT (Updated: 2021-01-16T01:43:38+05:30)

பாலியல் புகாரில் போலீஸ் விசாரணை முடியும் வரை மராட்டிய சமூக நீதித்துறை மந்திரி தனஞ்செய் முண்டே பதவி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

பாலியல் புகார்
மராட்டிய சமூக நீதித்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் தனஞ்செய் முண்டே (வயது 45). தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது மும்பையை சேர்ந்த 37 வயது பாடகி ஒருவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்தார்.

அந்த புகாரில், மந்திரி தனஞ்செய் முண்டே 2006-ம் ஆண்டு முதல் தன்னை பல தடவை கற்பழித்து உள்ளார் என்றும், இது தொடர்பாக ஓசிவாரா போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

ராஜினாமா வலியுறுத்தல்
ஆனால் இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த மந்திரி தனஞ்செய் முண்டே, பாடகியின் சகோதரியுடன் தனக்கு ஏற்பட்ட உறவு காரணமாக 2 குழந்தைகள் இருப்பதாகவும், அது எனது மனைவி, குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும் அறிக்கை விட்டார்.2019-ம் ஆண்டு முதல் அந்த பாடகி தனக்கு பிளாக் மெயில் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மந்திரி தனஞ்செய் முண்டே பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணா ஹெக்டே மற்றும் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ஒருவரும் தங்களையும் சம்பந்தப்பட்ட பாடகி தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளனர். இது தனஞ்செய் முண்டேக்கு சாதகமாக அமைந்தது.

ஆலோசனை
இதற்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், துணை முதல்-மந்திரி அஜித்பவார், மந்திரி ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேற்று முன்தினம் இரவு கூடி தனஞ்செய் முண்டே மீதான பாலியல் புகார் குறித்து ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனையின் முடிவில் தனஞ்செய் முண்டேக்கு எதிராக குற்றம்சாட்டிய பெண் மீது வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் புகார் தெரிவித்து இருப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மந்திரி தனஞ்செய் முண்டேயை பதவி நீக்கம் செய்வது இல்லை என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சரத்பவார் பதில்
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

மந்திரி தனஞ்செய் முண்டே மீது பாலியல் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் பெண் உதவி கமிஷனர் ஒருவரும் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதுவரை தனஞ்செய் முண்டே மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படாது.

இவவாறு அவர் கூறினார்.

இதன் மூலம் மந்திரி தனஞ்செய் முண்டேக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்து உள்ளது.

Next Story