பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் திருவிழாவில் காளை சாவு - இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி


பனமடங்கி கிராமத்தில் மாடு விடும் திருவிழாவில் காளை சாவு - இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 16 Jan 2021 12:15 PM GMT (Updated: 16 Jan 2021 12:15 PM GMT)

காட்பாடியை அடுத்த பனமடங்கி கிராமத்தில் நடந்த மாடு விடும் திருவிழாவில் கீழே விழுந்து காளை ஒன்று இறந்தது. காளைகள் முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

காட்பாடி,

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பனமடங்கி கிராமத்தில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பனமடங்கி மெயின் ரோட்டில் சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு காளை விடும் திருவிழாவை குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் தாசில்தார் ராஜேஸ்வரி, காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 127 காளைகள் கலந்து கொண்டன. திருவிழாவை பார்க்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் பனமடங்கி கிராமத்திற்கு வந்தனர். சாலைகளில் மட்டுமல்லாது கட்டிடங்கள் மேலேயும் நின்று வேடிக்கை பார்த்தனர். சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் காளைகளை உற்சாகப்படுத்தினர். சாலை தடுப்பு கம்புகள் முன்னால் சில இளைஞர்கள் கும்பலாக நின்று கொண்டே ஓடும் காளைகளுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் போலீசார் அந்த இளைஞர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

திருவிழாவை முன்னிட்டு குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.65 ஆயிரமும் இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.40 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ.30 ஆயிரம் உள்பட மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

திருவிழாவில் ஓடிய காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் மெயின் ரோட்டில் ஓடிய 3 காளைகள் சாலையில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில் காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவரின் காளை பரிதாபமாக இறந்தது.

லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story