மூங்கில்துறைப்பட்டு அருகே, டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பலி


மூங்கில்துறைப்பட்டு அருகே, டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2021 12:24 PM GMT (Updated: 2021-01-16T17:54:23+05:30)

மூங்கில்துறைப்பட்டு அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பலியானார்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள அத்தியூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் குள்ளு மகன் மணிகண்டன்(வயது 32). இவர் வடபொன்பரப்பி ஆரம்பசுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள புதூர் ஏரி அருகே வந்தபோது முன்னால் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மணிகண்டன் தான் பணிபுரிந்து வந்தகாலத்தில் இதுவரை ஆம்புலன்சில் எற்றி சென்ற நோயாளிகளில் ஒருவர் கூட இறந்தது இல்லை என்றும் ஆனால் விபத்தில் அவர் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருப்பதாக கிராமமக்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர். பலியான மணிகண்டனுக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும் கோபிநாத்(4), ரகுநாதன்(2) என்ற மகன்களும் உள்ளனர். தற்போது சுகந்தி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விபத்து குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story