உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2021 3:58 PM GMT (Updated: 2021-01-16T21:28:17+05:30)

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:- அநீதி எங்கே நடந்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் மாவட்டமாக மதுரை மேற்கு மாவட்டம் இருக்கும் என்பதற்கு சாட்சியாக இந்தகூட்டம் திகழ்கிறது. அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும்கூட ஜனநாயக கடமையை கடைப்பிடிக்கும். உதயநிதியின் பக்குவமற்ற பேச்சு அநாகரீகத்தின் உச்சகட்டமாக உள்ளது. தாயை தெய்வமாக வணங்கும் இனம் தமிழ் இனம் ஆகும்.

அந்த தாயை முகம் சுளிக்கும் வகையில் பேசியது தமிழினமே வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறது. என்பதை உதயநிதிக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களிடத்தில் வாக்குபெற வேண்டும் என்றால் மக்களை சந்திக்க வேண்டும். ஆனால் கொேரானா காலத்தில் ஸ்டாலின் எங்கே போனார் நான்கு சுவர் அறையில் உட்கார்ந்து கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கட்சிக்காரர்களிடம் மட்டும் பேசினார்.

ஆனால் தன் உயிரை பணயம் வைத்து அம்மாவின் வழியில் அனைத்து மாவட்டங்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து மக்களையும் சந்தித்தவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தற்போது கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடித்தவுடன் வெளியே வருகிறார் ஸ்டாலின். மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், நீதிபதி, பெரியபுள்ளான் என்ற செல்வம், மேற்கு மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் பாவடியான், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், கல்லுப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வக்கீல் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் செல்வமணி செல்லச்சாமி, டி.கல்லுப்பட்டி நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், பேரையூர் நகர் செயலாளர் நெடுமாறன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story