பொன்னமராவதி அருகே, தொடர் மழையால் கண்மாய் கரை உடைந்தது - கிராம மக்கள் சீரமைத்தனர்


பொன்னமராவதி அருகே, தொடர் மழையால் கண்மாய் கரை உடைந்தது - கிராம மக்கள் சீரமைத்தனர்
x
தினத்தந்தி 16 Jan 2021 5:14 PM GMT (Updated: 2021-01-16T22:44:41+05:30)

தொடர் மழையின் காரணமாக பொன்னமராவதி அருகே உடைந்த கண்மாய் கரையை கிராம மக்கள் சீரமைத்தனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. இதேபோல பொன்னமராவதி பகுதியிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக ஆலவயல் பகுதியில் உள்ள சின்னப்பிச்சான் கண்மாயில் நீர் பெருகியது. இதனால், கண்மாய் கரை எந்த நேரத்திலும் உடையும் என்று அப்பகுதி மக்கள் கருதியதால் முன்னேற்பாடாக கண்மாயை சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைத்தனர்.

ஆனால், அதனையும் மீறி கண்மாய் கரை உடைந்து அதன் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அறிந்த கிராமமக்கள் ஒன்றிணைந்து மேலும் மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை தற்காலிமாக சீரமைத்தனர்.

தொடர் மழையின் காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்குடி பெரிய கண்மாய் அதன் கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. 15 ஆண்டுகளாக இந்த கண்மாய் வறண்டு கிடந்ததால் நெல் நடவு செய்வதை விவசாயிகள் கைவிட்டனர். மாற்று ஏற்பாடாக தைல மரங்களையும், சவுக்கு மரங்களையும் வளர்த்து வருகின்றனர். தற்போது கண்மாய் முழுமையாக நிரம்பி உள்ளதால் ஆலங்குடி, பள்ளத்தி விடுதி, கல்லாலங்குடி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் மழையின் காரணமாக விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பேராம்பூர், கத்தலூர், வேலூர், குன்னத்தூர், ஆவூர், மாத்தூர், மண்டையூர், லட்சுமணம்பட்டி, மலம்பட்டி, விளாப்பட்டி, பாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனை வேளாண்மை துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மழைக்கு ஒரண்டகுடி கல்யாணியின் வீடு, பேராம்பூர் சித்ரா, மாரிக்கண்ணு, பாலாயி, அவ்வையார்பட்டி கண்மணி ஆகியோரது வீட்டின் சுவர்கள் மற்றும் கூரைகளும், விராலிமலை ஒன்றியத்தில் உள்ள குளத்தூர் தாலுகாவை சேர்ந்த மண்டையூர் வேலாயுதம், மாத்தூர் கண்ணன் மற்றும் ராசிபுரம் லட்சுமி ஆகியோரது வீட்டு சுவர்களும் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

அதேபோல விராலிமலை தாலுகா பேராம்பூர் கோபால் மனைவி மாரிக்கண்ணு என்பவரின் 4 செம்மறி ஆடுகள், கல்லுப்பட்டி சகாயராணி என்பவரின் ஒரு செம்மறி ஆடு, மதயானைபட்டி ஆறுமுகத்தின் 4 வெள்ளாடுகள், அவ்வையார்பட்டி பரமசிவம் மனைவி சுசீலா என்பவரின் பசுமாடு மற்றும் குளத்தூர் தாலுகா தென்னதிரையன்பட்டி கலைச்செல்வி என்பவரின் பசுமாடு, லட்சுமணம்பட்டி பெரியநாயகம் என்பவரின் பசுமாடு உள்பட 12 கால்நடைகள் இந்த தொடர் மழையின் காரணமாக செத்தன.

இந்த தொடர் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து விராலிமலை வேளாண்மை உதவி இயக்குனர் ராமு மற்றும் விராலிமலை, குளத்தூர் தாலுகாவை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் சேதமடைந்த நெற்கதிர்கள், வீடுகள் மற்றும் கால்நடைகளை பார்வையிட்டு சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால், ஆவுடையார்கோவில் அருகே உள்ள காராகுடி கிராமத்தில் உள்ள நெல் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த விவசாய நிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் மூதாட்டி சகுந்தலா என்பவரின் வீட்டில் ஓடுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்தன. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலை 6.45 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழை சிறிது இடைவிடாமல் பெய்தது.

மழையின் காரணமாக கறம்பக்குடி அருகே உள்ள ஓட்டல் தொழிாலாளி மழையூரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (வயது58) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து உத்திரம், ஓடுகளும் சரிந்து கொட்டின. அப்ேபாது, கல்யாணசுந்தரமும் அவரது குடும்பத்தினரும் வீட்டைவிட்டு வெளியேற வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Next Story