கோவையில் முதல்கட்டமாக 400 சுகாதார பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி


கோவையில் முதல்கட்டமாக 400 சுகாதார பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 16 Jan 2021 5:56 PM GMT (Updated: 2021-01-16T23:26:49+05:30)

கோவையில் முதல்கட்டமாக 400 சுகாதார பணியாளர்களுக்கு இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கோவை,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை கடந்த வாரம் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல், தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகிறது. இதற்காக கோவை மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கு தேவையான 73,200 கொரோனா தடுப்பூசிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இங்கிருந்து கோவை மாவட்டத்துக்கு 40,600, ஈரோடு மாவட்டம் 13,800, திருப்பூர் மாவட்டம் 13,500, நீலகிரி மாவட்டம் 5,300 தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிகள், நல்லாட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் என 4 மையங்களில் பணியாற்றும் தலா 100 பேர் தேர்வு செய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) தடுப்பூசி போடப்பட உள்ளது.

முதல் நாளான இன்று ஒரு மையத்துக்கு 100 பேர் வீதம் 400 பேருக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு 4 அரசு ஆஸ்பத்திரிகளுக் கும் தடுப்பூசியை பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது. தடுப்பூசிகளை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது? எவ்வாறு பாதுகாப்பாக செலுத்துவது என மருத்துவ குழுவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட விருப்பம் தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்களின் விவரங்கள் ஏற்கனவே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story