9 மாதங்களுக்கு பிறகு சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் திறப்பு; பொதுமக்கள் மகிழ்ச்சி


சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில் அங்கு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதை படத்தில்
x
சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில் அங்கு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதை படத்தில்
தினத்தந்தி 17 Jan 2021 12:35 AM GMT (Updated: 2021-01-17T06:05:28+05:30)

கடந்த 9 மாதங்களுக்கு பிறகு சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் நேற்று காலை திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காய்கறி மார்க்கெட்
சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான அண்ணா காய்கறி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் மொத்தம் 140 கடைகள் உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இந்த காய்கறி மார்க்கெட் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்படாமல் உள்ளது. இதை திறக்க கோரி வியாபாரிகள் சார்பில் பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் மார்க்கெட்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்த பின்னர் தான் காய்கறி மார்க்கெட் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துவிட்டது.

பராமரிப்பு
காய்கறி வியாபாரிகள் கேட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சிவகாசி நகராட்சி முன்வந்த போதும் நகராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க காலஅவகாசம் தேவைப்பட்டது. இந்த நிலையில் சிவகாசியில் உள்ள சில தொழில் அதிபர்கள் தானாக முன்வந்து அண்ணாகாய்கறி மார்க்கெட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்தனர்.

அதனை தொடர்ந்து அண்ணா காய்கறி மார்க்கெட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி
வியாபாரிகள் கேட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் காய்கறி மார்க்கெட் திறக்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து கடந்த 11-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது. . இதைதொடர்ந்து சிவகாசி சப்- கலெக்டர், பொங்கலையொட்டி காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் நேற்று காலை அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள கடைகள் 9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நகராட்சி வருவாய் பிரிவு அதிகாரி சரவணன் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட்டுக்கு வந்து அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை தவிர மற்றவர்களுக்கு மார்க்கெட்டுக்குள் அனுமதி இல்லை என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இடையூறு இல்லை
இதனால் மார்க்கெட் உள்ளே தரையில் வைத்து விற்பனை செய்பவர்களை காணமுடியவில்லை. ஆதலால் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் மார்க்கெட்டுக்கு உள்ளே சென்று எவ்வித இடையூறும் இல்லா மல் வெளியே வந்தது.

இனிவரும் நாட்களில் மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை மார்க்கெட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்படி நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

காரனேசன்
சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட உழவர்சந்தை மார்க்கெட், காரனேசன் பகுதியில் அமைக்கப்பட்ட மார்க்கெட் ஆகியவை விரைவில் அகற்றப்படும் என்று கூறப்படுகிறது.

போக்குவரத் துக்கு இடையூராக உள்ள காரனேசன் பகுதி மார்க்கெட்டை மட்டும் அகற்றி விட்டு, உழவர் சந்தை மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட தேவையான நடவடிக்கையை சிவகாசி சப்-கலெக்டர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story