காணும் பொங்கலையொட்டி மலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்


காணும் பொங்கலையொட்டி மலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2021 1:57 AM GMT (Updated: 2021-01-17T07:27:26+05:30)

காணும் பொங்கலையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

திருச்சி, 

ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 2-ம் நாள் மாட்டு பொங்கலாகவும், 3-ம் நாள் காணும் பொங்கலாகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் தினத்தில் குடும்பத்தினர் உற்றார், உறவினர்களோடு சேர்ந்து சுற்றுலாத்தலங்களுக்கு சென்று பொழுது போக்குவார்கள்.

திருச்சி மாவட்டத்தில் வழக்கமாக காணும் பொங்கலன்று முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் 15-ந் தேதி முதல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அறிவித்து இருந்தார்.

மலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்

இதனால் காணும் பொங்கலை குடும்பத்துடன் எங்கு சென்று கொண்டாடுவது என தெரியாமல் தவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற பலர் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கேயே பாறைகளில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பொழுதுபோக்கி காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனால் மலைக்கோட்டையில் வழக்கத்தைவிட பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் மற்றொருபுறம் முக்கொம்பு சுற்றுலாத்தலத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வண்ணத்துப்பூச்சி பூங்காவிலும் ஆட்கள் நடமாட்டமில்லாமல் களையிழந்து காணப்பட்டது.

Next Story