செஞ்சி கோட்டைக்கு சென்ற சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீசார்


செஞ்சி கோட்டைக்கு சென்ற சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 17 Jan 2021 5:16 AM GMT (Updated: 17 Jan 2021 5:16 AM GMT)

சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் செஞ்சி கோட்டைக்கு சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் செஞ்சி கோட்டைக்கு சுற்றுலா சென்று பொழுதை கழிப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி செஞ்சி கோட்டைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செஞ்சி கோட்டைக்கு சென்றனர். அப்போது அங்கு கோட்டை முன்பு தடுப்பு வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுற்றலா பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

பயணிகள் ஏமாற்றம்

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். செஞ்சி கோட்டைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நேற்று செஞ்சி கோட்டை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story