சிங்காநல்லூரில் போலீஸ் சோதனை: கிளப்பில் சூதாடிய 30 பேர் கைது


சிங்காநல்லூரில் போலீஸ் சோதனை: கிளப்பில் சூதாடிய 30 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2021 3:30 PM GMT (Updated: 2021-01-17T21:00:46+05:30)

சிங்காநல்லூரில் உள்ள கிளப்பில் போலீசார் சோதனை நடத்தி, சூதாடிய 30 பேரை கைது செய்தனர்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் சாரதிநகர் பகுதியில் கிளப் ஒன்று உள்ளது. அதில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக கிளப் உரிமையாளர் தேவராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சர்வதேச அளவில் சூதாட்ட கிளப்புகளில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் அதற்கேற்றார்போல் பல வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். அது போல் இங்கும் பணபரிமாற்றம் செய்ய டோக்கன் முறை இருந்தள்ளது. அந்த டோக்கன் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த கிளப், பொழுதுபோக்கு அம்சங்களை நடத்த அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் அங்கு சூதாட்டம் நடந்துள்ளது.

பொங்கல் விடுமுறையையொட்டி கிளப்பில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளனர். மேலும் அங்கு. மதுவும் பரிமாறப்பட்டு உள்ளது என்றனர்.

இந்த கிளப் கடந்த 3 ஆண்டுகளாக அரசியல்வாதிகள் சிலரின் ஆதரவுடன் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் அந்த கிளப்பை சுற்றி ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிளப்பில் போலீசார் சோதனை நடத்தி சூதாடிய 30 பேரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story