சத்தி அருகே பரிதாபம்: தோட்ட காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது - மற்றொருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி


சத்தி அருகே பரிதாபம்: தோட்ட காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது - மற்றொருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 17 Jan 2021 4:42 PM GMT (Updated: 2021-01-17T22:12:52+05:30)

சத்தியமங்கலம் அருகே தோட்ட காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது. மற்றொருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள அட்டணை கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி (வயது 46). சடையப்பன் (50). இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவர். அட்டணை கிராமத்தையொட்டி பெரியசாமி 3 ஏக்கர் பரப்பளவிலும், சடையப்பன் 5 ஏக்கர் பரப்பளவிலும் தங்களது தோட்டங்களில் குச்சிக்கிழங்கு பயிரிட்டு்ள்ளனர். இவர்களது விவசாய நிலம் அருகருகே உள்ளது.

இவர்கள் தங்களது தோட்டங்களில் பரண் அமைத்து இரவு நேரத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் பெரியசாமியும், சடையப்பனும் தோட்ட காவலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் 2 பேரும் பரணில் அமர்ந்து காவல் காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் யானை பிளிறும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு சடையப்பன் பரணில் இருந்து கீழே இறங்கி டார்ச் லைட் அடித்து பார்த்தார். அப்போது அங்கு ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி பெரியசாமியிடம் கூறியுள்ளார். உடனே அவரும் பரணில் இருந்து கீழே இறங்கி சடையப்பனின் தோட்டத்துக்கு சென்றார். அதைத்தொடர்ந்து 2 பேரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

ஆனால் யானை காட்டுக்குள் செல்லாமல் அருகே உள்ள ஒரு மரத்தின் பின்னால் சென்று மறைந்து கொண்டது. இதனை அவர்கள் கவனிக்கவில்லை. சிறிது தூரம் அவர்கள் சென்றதும் யானை பிளிறியுள்ளது. இதனால் 2 பேரும் பயந்து ஓட தொடங்கினர். அவர்களை யானை துரத்தியுள்ளது. இதில் பெரியசாமி யானையிடம் சிக்கி கொண்டார். அவரை துதிக்கையால் யானை தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

யானையிடம் இருந்து தப்பி ஓடிய சடையப்பன் கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து தோட்ட விவசாயிகள் அங்கு சென்று சடையப்பனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுபற்றி அறிந்ததும் கடம்பூர் போலீசாரும், வனத்துறையினரும் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெரியசாமிக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ராமர் என்ற மகனும், மகேஷ்வரி என்ற மகளும் உள்ளனர்.

தோட்டத்து காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக சத்தியமங்கலம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இறந்த பெரியசாமியின் மனைவியிடம் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

Next Story