மாமல்லபுரம் அருகே கோஷ்டி மோதல் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; பா.ம.க. கல்வெட்டு உடைப்பு


மாமல்லபுரம் அருகே கோஷ்டி மோதல் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; பா.ம.க. கல்வெட்டு உடைப்பு
x
தினத்தந்தி 17 Jan 2021 10:30 PM GMT (Updated: 2021-01-18T02:26:05+05:30)

மாமல்லபுரம் அருகே மது குடிக்கும்போது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பா.ம.க. கல்வெட்டு உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பெருமாளேரி பஸ் நிறுத்தம் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் பெருமாளேரி கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலரும், அருகில் உள்ள பையனூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது பெருமாளேரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகில் மது குடித்து கொண்டிருந்த பையனூர் வாலிபரிடம் சிகரெட் புகைப்பதற்காக தீப்பெட்டி கேட்டுள்ளார். அதற்கு அவர் தீப்பெட்டி இல்லை என்று கூறியுள்ளார். மதுபோதையில் இருந்த இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கோஷ்டி மோதலாக மாறியுள்ளது.

பின்னர் இரு தரப்பை சேர்ந்தவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் பையனூர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் கூட்டமாக மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து எதிர் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்பை சேர்ந்தவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் பையனூர் தரப்பை சேர்ந்த வாலிபர்கள் சிலர் எதிர் தரப்பினர் கொண்டு வந்த 2 மோட்டார் சைக்கிள்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. பின்னர் பெருமாளேரி பஸ் நிறுத்தம் அருகில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கல்வெட்டினை சிலர் உடைத்து சேதப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.

இதற்கிடையில் கோஷ்டி மோதலுக்கும் பா.ம.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பா.ம.க. கல்வெட்டை உடைத்து சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை ராதா, மாநில செயற்குழு உறுப்பினர் என்.கணேசமூர்த்தி ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த கோஷ்டி மோதல் தொடர்பாக பையனூர் பகுதியை சேர்ந்த 8 பேரையும், பெருமாளேரி பகுதியை சேர்ந்த 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story