புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா


எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது
x
எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது
தினத்தந்தி 17 Jan 2021 9:41 PM GMT (Updated: 17 Jan 2021 9:41 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்
முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல ஆங்காங்கே எம்.ஜி.ஆர்.உருவப்படங்களை வைத்து அலங்கரித்து அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

ஆதனக்கோட்டை - ஆவுடையார்கோவில்
ஆதனக்கோட்டை மற்றும் பெருங்களூர் கிராமத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஆவுடையார்கோவில் கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கூத்தையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் விஜயகுமார், ஒன்றிய பேரவை செயலாளர் கணேசபெருமாள், வீரமங்கலம் நாவினி வயல் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணியன், ஆவுடையார்கோவில் டாக்டர் மணிகண்டன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி - கந்தர்வகோட்டை
கறம்பக்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில், கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கும், மீன்கடை முக்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் - திருவரங்குளம்
அன்னவாசல் பேரூராட்சி பகுதியில், நகர அவைத்தலைவர் சாலைமதுரம் தலைமையிலும், நகர செயலாளர் அப்துல் அலி முன்னிலையிலும் ஒன்றிய தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல, இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி திருவரங்குளம் கடைவீதியில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. சார்பில் தனித்தனியே எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல, கேப்பரை, பூவரசகுடி, வல்லக்திரா கோட்டை, குளவாய்பட்டி, வம்பன் நால்ரோடு, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கீரனூர் - அறந்தாங்கி
குன்றாண்டார்கோயில் ஒன்றியம், கீரனூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக வடக்கு ரத வீதியில் இருந்து கந்தர்வகோட்டை ஆறுமுகம் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் உள்ள எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், ஒன்றிய பொறுப்பாளர் பாலு, நகர செயலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கருப்பையன், ராமராஜன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அறந்தாங்கி பெரிய தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் அறந்தாங்கி ரத்தினசபாபதி எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, வேலாயுதம் நகர செயலாளர் ஆதிமோகனகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காரையூர் - மணமேல்குடி
எம்.உசிலம்பட்டி ஊராட்சியில் மேலத்தானியம் கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. 

இதில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புஸ்பம் ராமையா, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மணமேல்குடியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் தலைமையில் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து மணமேல்குடி சந்தைப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story