புதுச்சேரி பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மரணம் அரசு மரியாதையுடன் உடல் தகனம்


புதுச்சேரி பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மரணம் அரசு மரியாதையுடன் உடல் தகனம்
x
தினத்தந்தி 18 Jan 2021 2:04 AM GMT (Updated: 2021-01-18T07:34:21+05:30)

புதுவை மாநில பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்ட சபையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வாக இருந்தவர் சங்கர் (வயது70). புதுவை மாநில பா.ஜ.க. பொருளாளராகவும் இருந்தார். அவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை க்கு தகவல் தெரிவித்தனர். உடனே டாக்டர்கள் அங்கு விரைந்து வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இளங்கோ நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், ‌ஷாஜகான், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ., தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சங்கர் எம்.எல்.ஏ.வின் உடல் நேற்று மாலை வீட்டில் இருந்து கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சங்கர் எம்.எல்.ஏ.வுக்கு பிரேமா லலிதா என்ற மனைவியும், சித்தார்த் என்ற மகனும், சச்சிதா என்ற மகளும் உள்ளனர்.

பா.ஜ.க.வில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த சங்கர் எம்.எல்.ஏ. 4 முறை மாநில பொருளாளராக இருந்துள்ளார். மாநில தொழில் மற்றும் வர்த்தக பிரிவின் அமைப்பாளராகவும் இருந்துள்ளார். அவரது பதவி காலத்தில் தேசிய அளவில் தொழில் மற்றும் வர்த்தக பிரிவின் நிர்வாகிகள் கூட்டத்தை புதுவையில் நடத்தியுள்ளார். மேட்டுப்பாளையத்தில் கெமிக்கல் கம்பெனி நடத்தி வருகிறார். கட்சியில் அவர் செய்த பணிகளை பாராட்டி நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கப்பட்டது.

கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘புதுச்சேரி பா.ஜ.க. பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான சங்கரின் அகால மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து சமூகத்தினரிடம், சக மனிதராகவும், பா.ஜ.க.வில் ஒழுக்கமான கட்சிக்காரராகவும் திகழ்ந்தவர். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை சுமக்கவும், இந்த துயரத்தை கடந்து வர பலத்தையும் அளிக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இயற்கை எய்திய சட்டமன்ற உறுப்பினரின் ஆன்மா அமைதியில் ஓய்வெடுக்கட்டும்’. என்று கூறியுள்ளார்.

சங்கர் எம்.எல்.ஏ. மறைவால் புதுச்சேரி சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.

Next Story