சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்


சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2021 2:32 AM GMT (Updated: 18 Jan 2021 2:32 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 3 இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நடந்தது.

சேலம்,

கொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி, பெரிய மாரியம்மன் கோவில் திடலில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நடைபெற்றது. புதுப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எருதுகளை கோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவில் முன்பு எருதுகளை நிறுத்தி அதற்கு திருநீறு இட்டு கோவிலை சுற்றி அழைத்து வந்தனர்.

பின்னர் எருதாட்டம் நடந்தது. இதில் ஏராளமான வாலிபர்கள் நீண்ட கம்பால் செய்த பொம்மையை எருதின் முன்பு காட்ட எருது மிரண்டு ஓடியது. வாலிபர்கள் அதனை இழுத்து பிடித்து எருதாட்டம் நடத்தினர். இதை காண ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டிருந்தனர்.

சின்னப்பிள்ளையூர்

சின்னப்பம்பட்டி அருகே உள்ள சின்னப்பிள்ளையூர் குபேர விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டம் நேற்று நடைபெற்றது. சின்னப்பிள்ளையூர், பனஞ்சாரி முனியப்பன் கோவில், தொப்பபட்டி மற்றும் சின்னபிள்ளையூர் பகுதிகளில் இருந்து வாலிபர்கள் எருதுகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக கற்பக விநாயகர் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

கோவிலில் காளைகளுக்கு பூசாரி சந்தன பொட்டு வைத்து பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் எருதாட்டம் நடைபெற்றது. எருதின் முன்பு பொம்மையை காட்டும் போது எருதுகள் மிரண்டு ஓடின. வாலிபர்கள் பொம்மையை காண்பித்தபடி விரட்டினர்.

இதில், சூரன் வளவு, மடத்தூர், சின்னப்பம்பட்டி, மேட்டுபாளையம், மாட்டையாம்பட்டி, கசப்பேரி கோடி, பாப்பம்பாடி, கரட்டூர், பஞ்சாரி முனியப்பன் கோவில் உள்பட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சின்னப்பிள்ளையூர் கிராமத்திற்கு வந்து எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.

பெரியேரிப்பட்டி

ஓமலூரை அடுத்த பெரியேரி பட்டி ஊராட்சி ரெட்டிப்பட்டியில் உள்ள பொடாரியம்மன் கோவிலில் எருதாட்டம் நடந்தது. உள்ளூர் மட்டுமன்றி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எருதுகள் கொண்டு வரப்பட்டு எருதாட்டம் நடந்தது.

இதில் ரெட்டிபட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாலிபர்கள் கலந்துகொண்டு எருதின் கழுத்தில் கயிற்றை கட்டி அதற்கு உரி காட்டி கோவிலை சுற்றி வந்தனர். இதை மக்கள் கண்டு ரசித்தனர்.

Next Story