கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கம்; 30 ஆயிரம் பேர் பயணம்
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
ஊரடங்கில் தளர்வு
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து மே மாதம் 24-ந் தேதி வரை 2 மாதங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகள் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு மே 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உள்நாட்டு விமான சேவைகள் குறைந்த எண்ணிக்கையில் இயங்க தொடங்கின. அதன்பிறகு பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தன.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 118 விமானங்கள் பிற நகரங்களுக்கு புறப்பட்டு சென்றன. பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 119 விமானங்கள் வந்தன. மொத்தம் 237 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் 25 ஆயிரத்து 600 போ் பயணித்தனா்.
254 விமானங்கள்
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 127 விமானங்கள் புறப்பட்டு சென்றன. சென்னைக்கு 127 விமானங்கள் வந்தன. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக நேற்று சென்னை விமான நிலையத்தில் 254 விமானங்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு சென்ற விமானங்களில் 12 ஆயிரத்து 400 பேரும், பிற நகரங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களில் 17 ஆயிரத்து 680 பேரும் என 30 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயணித்தனர். 8 மாதங்களுக்கு பிறகு விமானங்களின் எண்ணிக்கையும், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன.
இதற்கு காரணம் மக்களிடையே கொரோனா வைரஸ் பீதி வெகுவாக குறைந்து பயணிகள் இயல்பாக பயணிக்க தொடங்கி விட்டனா். மேலும் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையில் வெளியூா் சென்று இருந்தவா்கள் ஒட்டு மொத்தமாக சென்னை திரும்புகின்றனா். எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story