பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பினர்; ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்ததால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்


பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வந்ததால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வந்ததால் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தினத்தந்தி 19 Jan 2021 2:15 AM IST (Updated: 19 Jan 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வந்தனர். ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்ததால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை திரும்பினர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் சென்னையில் வசித்துவரும் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கலை கொண்டாட குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பலர் தனியார் பஸ்கள் மற்றும் தங்கள் சொந்த வாகனங்களிலும் சென்றனர்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த வாகனங்களில் சென்றவர்கள் நேற்று முன்தினம் முதலே சென்னை திரும்பி வரத்தொடங்கினர். இதனால் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்
நேற்று அதிகாலை முதலே தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் தனியார் மற்றும் அரசு பஸ்களில் சென்னை திரும்பி வந்தனர். பலர் கார்களிலும் வந்தனர். பொங்கலுக்கு சென்றவர்கள் மட்டுமின்றி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதால் இதுநாள் வரை சொந்த ஊர்களில் இருந்தவர்களும் நேற்று காலை சென்னை திரும்பி வந்தனர்.

இதனால் ஒரே நேரத்தில் அதிகளவில் வாகனங்கள் சென்னை நோக்கி படையெடுத்து வந்ததால் வண்டலூர் மேம்பாலத்தில் இருந்து பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே சென்றன.

வேலைக்கு செல்பவர்கள் அவதி
இதனால் காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன், சேலையூர் உதவி கமிஷனர் சகாதேவன் மற்றும் போக்குவரத்து போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் பெருங்களத்தூர் முதல் பரங்கிமலை வரை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் தாம்பரம், பல்லாவரம், கிண்டி, ஆலந்தூர், மயிலாப்பூர், அடையாறு போன்ற பகுதிகளுக்கு செல்ல பெருங்களத்தூரில் இறங்கி அங்கிருந்து மாநகர பஸ், ஆட்டோ, கார்கள் மூலம் தாம்பரம் சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ்கள், மின்சார ரெயில்களில் செல்வது வழக்கம்.

பஸ்-ரெயில்களில் கூட்டம்
இதனால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டால் அலுவலக நேரங்களில் மின்சார ரெயில்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் பலர் மாநகர பஸ்களில் செல்ல முடியாமல் ஆட்டோக்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றனர். அலுவலக நேரத்துக்கு பிறகு மின்சார ரெயில்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால் அதன்பிறகு வழக்கத்தைவிட மின்சார ரெயில்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story